ரூ.500, ரூ.1000 தடையால் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமண நிகழ்ச்சி நடத்தியவர்கள், சமையல்காரர் முதல் பலசரக்கு வியாபாரிகள் வரை செய்வதறியாமல் தவித்தனர்.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நேற்று முன்தினம் இரவு திடீரென பிரதமர் அறிவித்தார். இதனால் ஏற்பட்ட சிரமங்கள், மதுரை மாவட்டத்தில் நேற்று நகரம் முதல் கிராமம் வரை எதிரொலித்தது. மளிகைக்கடைகள், பால்காரர்கள் முதல் சூப்பர் மார்க்கெட் வரையும், சாலையோர தள்ளுவண்டி சாப்பாட்டு கடைகள் முதல் ஹோட்டல்கள் வரையும், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுத்ததால் மக்கள் அன்றாட செலவுக்கு பணமில்லாமல் தவித்தனர். மருந்து கடைகள், மருத்துவமனைகளில் ரூ.500, ரூ.1000 வாங்கப்பட மாட்டாது என அறிவிப்பு ஒட்டினர்.
அதனால், மருந்துகள், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். பெட்ரோல் பங்க்குகளில் ரூ.100, ரூ.500 அல்லது ரூ. 1000 ரூபாய்க்குத்தான் பெட்ரோல் போடுவோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனால், உறவினர்கள், நண்பர்களாக இரண்டு, மூன்று பைக்குகளுக்கு சேர்த்து பெட்ரோல் போட்டனர். தென் மாவட்டத்தில் மதுரை முக்கிய வர்த்தக நகரம் என்பதால் பணப்புழக்கம், மக்கள் நடமாட்டம் குறைந்ததால் ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வியாபார நிறுவனங்கள் வெறிச்சோடி ஒட்டுமொத்த வர்த்தகமே ஸ்தம்பித்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 9-ம் தேதி, நாளை 11-ம் தேதி முக்கிய முகூர்த்த தினங்கள். அதனால், நேற்று மதுரையில் ஏராளமான திருமணங்கள், புது வீடு கிரகப்பிரவேசங்கள் நடந்தன. திருப்பரங்குன்றத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 200 திருமணங்கள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் விஷேசம் நடத்திய வீட்டுக்காரர்கள், சில்லரை செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடினர்.
வழக்கமாக செய்யும் செய்முறை, மொய்யைவிட குறைவான தொகையை வைத்தனர். அத னால், நேற்று சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளே களையிழந்து காணப்பட்டது.
‘பேஸ்புக்கில்’ உருக்கமான பதிவு
திருமண வீட்டுக்காரர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பேஸ்புக் பக்கத்தில், நாளை காலை (இன்று) என் தங்கையின் திருமணம், இப்பொழுது தான் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். வரவேற்பு நிகழ்ச்சியின்போது மண்டபத்தில் ரூ.500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்கிற செய்தி பரவத் தொடங்கியது.
மண்டபத்தின் வாடகையை ரூ.100 ஆகத் தான் பெறுவோம் என மேலாளர் கூறிவிட்டார். எங்கள் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வரும் இரு பேருந்துகளுக்கு எப்படி மதியம் பணம் கொடுப்பது என தெரியாமல் தவிக்கிறோம். நாளை மொய் எப்படி வாங்குவது என இரு வீட்டார் மத்தியில் பெரிய விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமையல்காரர் முதல் பலசரக்கு வரை எப்படி பணம் கொடுப்பது.
இப்படியாக 30 தலைப்புகளில் நாளை அவர்கள் எப்படி பணம் பட்டுவாடா செய்வார்கள் என கையை பிசைந்து நிற்கின்றனர் என தெரிவித்திருந்தார்.