அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்தத் தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித் தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை (19-ம் தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக் குறிச்சியில் வி.செந்தில்பாலாஜி (அதிமுக), கே.சி.பழனிச்சாமி (திமுக) உட்பட 39 வேட்பாளர் களும், தஞ்சையில் ரெங்கசாமி (அதிமுக), அஞசுகம் பூபதி (திமுக) உட்பட 14 பேரும், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் (அதிமுக), சரவணன் (திமுக) உட்பட 28 வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர். நெல்லித்தோப் பில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
4 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பாஜக, தேமுதிக கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரம் முடிந்ததையடுத்து, மாலை 5 மணிக்குமேல் வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தொகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக் கூடங்கள், விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி, வெளியாட்களை வெளியேற்றினர்.
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:
அரவக்குறிச்சியில் 245, தஞ்சையில் 276, திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டில் முதல்முறை யாக இந்தத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் என அரவக்குறிச்சியில் 1,482, தஞ்சையில் 1,807, திருப்பரங்குன்றத்தில் 1,745 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் 812 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,593 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, 122 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 240 மின்னணு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. அரவக்குறிச்சியில் 96, தஞ்சையில் 275, திருப்பரங்குன்றத்தில் 254 என 625 வாக்குச்சாவடிகளில் இணைய வழி கண்காணிப்பு (வெப் ஸ்ட்ரீமிங்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 39 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரத்தை பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் துறை இணையதளத்தில் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தேர்தல் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 76 புகார்கள் உட்பட மொத்தம் 127 புகார்கள் வந்துள்ளன. இதில் 39 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு கைவிரலில் மை வைக்கப்படுகிறது. தேர்தல் நடப்பதால், இந்தத் தொகுதிகளில் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு அடையாளமாக இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப் படும். எனவே, பணத்தை மாற்றுபவர்கள் தெரியாமல் இடது கையில் மை வைத்துவிட்டு வந்தால், அவர்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.