தமிழகம்

புரசைவாக்கம் வேம்படி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலம் மீட்பு

80 எல்லைக் கற்கள் நட்டு அறநிலையத் துறை அதிரடி

துரை விஜயராஜ்

சென்னை: புரசைவாக்கம் வேம்படி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை மீட்டு 80 எல்லைக் கற்களை அறநிலையத் துறை அதிகாரிகள் நட்டுள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள வேம்படி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கெண்டிரச்சேரி கிராமத்தில் உள்ளன. மொத்தம் 18 சர்வே எண்களில் அமைந்துள்ள 8 ஏக்கர் 86 சென்ட் பரப்பளவிலான இந்நிலங்களில், 6 ஏக்கர் நன்செய் நிலமும், 2.86 ஏக்கர் புன்செய் நிலமும் அடங்கும். இந்த நிலங்கள் பல ஆண்டுகளாகத் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கங்காதீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம் உத்தரவிட்டார்.

அதன்பேரில், அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் சரவணன், கோயில் மேலாளர் தனசேகர், எழுத்தர் வசந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர், மதுராந்தகம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் கெண்டிரச்சேரி கிராமத்துக்குச் சென்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சென்னை மண்டலம் - ஒன்றை சேர்ந்த நில அளவையர்களான ராஜா மற்றும் ஆனந்தன் ஆகியோர் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அளவீட்டுக் கருவியின் உதவியுடன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைத் துல்லியமாக அளவீடு செய்து எல்லைகளை உறுதி செய்தனர். முதற்கட்டமாக 45 எல்லைக் கற்கள் நடப்பட்டு, 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்திருந்தன.

இந்நிலையில், மீதமிருந்த 35 எல்லைக் கற்களும் தற்போது முழுமையாக நடப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 80 எல்லைக் கற்கள் நடப்பட்டு, 18 சர்வே எண்களுக்கு உட்பட்ட 8.86 ஏக்கர் கோயில் நிலங்களும் முழுமையாக மீட்கப்பட்டு கோயிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்பட்ட நிலங்களில் வேலி அமைத்துப் பாதுகாக்கும் பணிகளையும் அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT