10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலி 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் போலி 10 ரூபாய் நாணயங்களை தயாரித்த 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சிலர் பரப்பிய வதந்திகளால் பொதுமக்கள், வணிகர்கள், சிறு வியாபாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த நாணயங்கள் சட்டப்படி செல்லுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
எனவே இத்தகைய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும். அவற்றை பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.