சென்னை: சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பல்வேறுபணிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் சாலைகளில் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. மேலும் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் உதயநிதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோரை ரிப்பன் மாளிகையில் நேற்று சந்தித்தார். அப்போது, தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த கோரிக்கை மனுவை ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார். திட்டப் பணிகள் குறித்த திட்ட வரைபடங்களுடன், அவரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, துணை ஆணையர் (பணிகள்) எம்.எஸ்.பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.