தமிழகம்

மாணவி சத்யா கொலை வழக்கு; சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சிறையிலுள்ள இளைஞர் சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை(20), அதே பகுதியைச்சேர்ந்த சதீஷ்(23) கடந்த 13-ம்தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இதையடுத்து சதீஷை கைது செய்த ரயில்வே போலீஸார், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் தங்களது முதற்கட்ட விசாரணையை கடந்த 15-ம் தேதி தொடங்கினர். சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் நிலையம், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ரயில் ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்றது.

உறவினர்களிடம் விசாரணை: அடுத்தகட்டமாக, மாணவியின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்து தனியார் தொலைக்காட்சிகள், யூடியூப்சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல, ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் மாணவியின் தாயாரான தலைமைக் காவலர் ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், சதீஷின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடிபோலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சதீஷ் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.அதன்படி, சிறையில் உள்ள சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை தீபாவளி முடிந்த பிறகு வரவுள்ளது.

SCROLL FOR NEXT