மனித சமூகத்தின் வளர்ச்சியில் குறிப்பாக எழுத்துத் துறையில் கடந்த சில நூற்றாண்டுகளாக முக்கியப் பங்குவகித்த ‘ட்ரெடில்’ அச்சு இயந்திரம், நவீன ஆப்செட்-டின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்சிப் பொருளாகி வருகிறது.
மனித குலத்தின் எழுத்து வரலாறு, முதலில் பாறைகளில் கல்வெட்டாகப் பதிந்து, பின்னர் பனை ஓலைக்கு மாறியது. காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மை கொண்டு கையால் எழுதினான் மனிதன். 600 ஆண்டுகளுக்கு முன்புவரை புத்தக வடிவம் அல்லது ஆவணமாக பதிவு செய்தது எல்லாம் கையெழுத்துப் பிரதியாக மட்டுமே இருந்தது.
1436-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோகன்ஸ் கூட்டன் பெர்க் என்பவர் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தால் அதிக பிரதிகள் எடுக்க முடிந்தது. உலோகம் மூலம் வார்த்து எடுக்கப்பட்ட எழுத்து அச்சுகளைக்கொண்டு இயங்கிய இவரது இயந்திரம் உலகம் முழுவதும் பரவியது.
கடந்த காலங்களில் பலவித மாற்றங்களைச் சந்தித்த அச்சுத் தொழிலில் முக்கியப் பங்கு வகித் தது ‘ட்ரெடில்’ அச்சு இயந்திரம். 19-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் ‘ட்ரெடில்’ இயந்திரம் கொடி கட்டிப் பறந்தது. சிறு குறு நகரங்களில்கூட அச்சுத் தொழில் நடைபெறும் பகுதியில் டடக்... டடக்... டடக்... என்ற ‘ட்ரெ டில்’ இயந்திரம் இயங்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
இதெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த நிலை. தற் போது ஏற்பட்டுள்ள நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால், இன்றைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியா மல், ‘ட்ரெடில்’ இயந்திரத்தின் சத்தம் அடங்கிவிட்டது. மாறாக அதே இடங்களில் டிஜிட்டல் ஆப்செட் பிரிண்ட் இயந்திரத்தின் சத்தம் சர்ர்... சர்ர்ர்ர்... என விரைவாக காற்றில் கலந்து செல்கிறது.
எழுத்துகளை கம்போஸ் செய்யும் விசுவாசம்.
இந்த மாற்றம் குறித்து திருச்சி அம்மன் பிரஸ் ராஜகோபால் கூறும்போது, “1970-ல் இருந்து 46 ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் திருமண பத்திரிகை, பில் புக், ஆபீஸ் லெட்ஜர் மற்றும் புத்தக வேலை, பைண்டிங் என எப்போதும் பிஸியாக இருப்போம். பிரின்ட்டர், கம்போஸர், பைண்டர், ஒரு உதவியாளர் என 4 பேருக்கு எப்போதும் வேலை இருக்கும். கலர் பிரின்ட் என்றால் 2, 3 பிளாக்குகள் செய்து ஓட்டுவோம். ஆப்செட் வருகைக்குப் பிறகு சிங்கிள் கலர் ஓட்டவே வழியில்லை. என் காலத்தோடு இந்தத் தொழில் காணாமல் போய்விடும்” என்றார் வேதனையுடன்.
பிரின்ட்டர் சத்தியமூர்த்தி கூறும் போது, “16 வயதிலேயே பிரின்ட் டர் ஆகிவிட்டேன். பிரஸ் தொழில் மீது அவ்வளவு ஆசை எனக்கு. மிஷினை ஓட்டும்போது டடக்... டடக்... டடக்... என வரும் சத்தத் துக்கு நடுவே நாசியைத் தொடும் மை வாசம் என்னுள் கலந்துவிட்டது. மின்சார வசதி இல்லாதபோது காலில் பெடல் செய்து மிஷினை இயக்கினோம்” என்றார்.
கம்போஸர் விசுவாசம் கூறும் போது, “கம்ப்யூட்டரில் டைப் அடித்து, சரிபார்த்துவிட்டு பிளேட் போட அனுப்புவதுபோல அல்ல என்னுடைய வேலை. ஒரு மேட்டர் கம்போஸ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும். இரும்பு, ஈயம் கலந்த காரீயத்தால் ஆன எழுத்து அச்சுகளை மரக்கட்டையில் அடுக்கி அச்சுக் கோர்க்க வேண்டும். தற்போது புதிய எழுத்துகளை யாரும் உருவாக்குவதில்லை” என்றார்.