திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கன மழையால் சேதமடைந்த பகுதிகளை இரு சக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா
நேற்று ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளன. குறிப்பாக, நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருப்பத்தூரில் பெய்த கனமழையால் சேதமடைந்த பகுதிகளுக்கு நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மழையால் சேதமடைந்த பகுதிகளை இரு சக்கர வாகனத்தில் சென்று நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலை அருகே ரயில்வே தரைப்பாலம் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மழைநீர் தேங்காமல் சீராக செல்ல கால்வாய் அமைக்க வேண்டும். அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி மழைநீர் குடியிருப்புப் பகுதிக்குள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக செய்ய வேண்டும் என திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.