விவசாயிகளை காப்பாற்றும் நோக்குடன் உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் கோவிந்தராஜன் என்ற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சம்பா சாகுபடிக்காக கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சாதாரண விஷயங்களுக்குக் கூட தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலை மோசமடைந்து விட்டதை நினைக்கும் போது வேதனையில் நெஞ்சம் வலிக்கிறது. கோவிந்தராஜனை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விதை நெல் முளைக்காததை மேலோட்டமாக பார்க்கும் போது சாதாரணமான செய்தி போன்று தோன்றினாலும், அதன் பின்னணியில் ஏராளமான துயரங்களும், வலிகளும், வேதனைகளும் உள்ளன. திருவாரூர் மாவட்டம் காவிரியின் கடைமடை பாசனப் பகுதியாகும். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, 57 நாட்களாகிவிட்ட நிலையில், இதுவரை கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை. இதனால் பூமியின் வெப்பம் தணியவில்லை. அதனால் தான் விதைநெல் முளைக்கவில்லை.
ஏற்கெனவே, கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், இந்த ஆண்டும் கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் கடன் சுமை அதிகரித்து விடும்; அதைத் திருப்பி செலுத்தும் சக்தி தமக்கு இல்லை என்பதால் தான் விவசாயி கோவிந்தராஜன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலை கோழைத்தனமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், கோவிந்தராஜனின் நிலையில் இருந்து பார்க்கும்போது தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
கடந்த சில மாதங்களாகவே கடன் தொல்லை, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமை, விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. வங்கி நிர்வாகங்கள் மற்றும் குண்டர்களின் மிரட்டல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி கடன் தவணையை செலுத்தாததற்காக அவரை வங்கி அதிகாரிகளும், காவல்துறையினரும் கடுமையாக தாக்கி, டிராக்டரை பறித்துச் செல்லும் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதைத் தொடர்ந்து கடந்த மாதம் இதேநாளில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற விவசாயி வாங்கிய டிராக்டர் கடனுக்கான தவணையை செலுத்தத் தவறியதற்காக வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். விவசாயத்தை ஒற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் அதில் நஷ்டம் ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
ஆனால், இயற்கையும், அண்டை மாநிலங்களும், மத்திய அரசும் நமக்கு எதிராகவே செயல்படுகின்றன. காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகமோ மனிதாபிமான அடிப்படையில் கூட காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது.
இவற்றுக்கு அப்பாற்பட்ட சக்தியான இயற்கையாவது வடகிழக்குப் பருவமழையாவது நன்றாக பெய்து விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் முதல் வாரம் நிறைவடையவுள்ள சூழலில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியாக மழை இல்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில், காவிரியில் தண்ணீர் வந்து சம்பா பயிரைக் காப்பாற்றும் என்று நம்பியிருப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டால் தமிழகம் முழுவதும் வறட்சியும், தமிழக விவசாயிகள் வாழ்க்கையில் வறுமையும்தான் தாண்டவமாடும். அத்தகைய சூழலில் விவசாயிகளின் தற்கொலையை ஆண்டவனே நினைத்தாலும் தடுக்க முடியாது.
எனவே, விவசாயிகளை காப்பாற்றும் நோக்குடன் உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த வேண்டும். அத்துடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயி கோவிந்தராஜன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.