தமிழகம்

தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை இபிஎஸ் தரப்பிடம் தருவதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை அக். 26-க்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

மதுரை: தேவர் ஜெயந்தியின்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேவர் ஜெயந்தியின்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் 2014-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தரப்பட்ட 13 கிலோ தங்கக் கவசம், மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரிலான வங்கிக் கணக்கில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக பொருளாளரும், தேவர் நினைவாலயப் பொறுப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டு வங்கி லாக்கரில் இருந்து பெறுவது வழக்கம்.

அதிமுக பொதுக்குழுவில் பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகவும், நான் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதிமுக வங்கிக் கணக்குகளை கையாள எனக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தங்கக் கவசத்தை என்னிடம்தான் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக வங்கிக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், வங்கி நிர்வாகம் தங்கக் கவசத்தை என்னிடம் ஒப்படைக்க மறுத்ததுடன், அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலய வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி நாளில் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கவும், அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலய வங்கிக் கணக்கை அதிமுக சார்பில் இயக்க எனக்கு அனுமதி வழங்கவும் வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி பவானி சுப்புராயன் நேற்று விசாரித்தார். திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான சுப்புரத்தினம் ஆகியோர் வாதிடுகையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தங்கக் கவசத்தை மனுதாரரிடம் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கூறினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள், வங்கி நிர்வாகம் ஆகியோர் தரப்பில், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை தாங்கள் பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்டு, அடுத்த விசாரணையை அக்.26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT