சென்னை: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடி வரும் இந்த முக்கிய தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கார்கே தேர்வாகியுள்ளார். தமது புதிய பொறுப்பில் அவர் வெற்றி காண வாழ்த்துகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தொண்டர்களின் தலைவர். அவரது தலைமையில் காங்கிரஸ் வலுப்பெற வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மதிமுக சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தமாகா சார்பில் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பாமக தலைவர் அன்புமணி, காந்தி ஃபோரம் தமிழகத் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.