பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒழுங்கு நடவடிக்கை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் படி அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை நேற்று (அக்.18) தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்த சம்பவத்தில் காவல் துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரை தொடர்பாகவும், அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.19) சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, மதிமுக சதன் திருமலைக் குமார், சிபிஐ ராமச்சந்திரன், சிபிஎம் சின்னத்துரை, விசிக சிந்தனைச் செல்வன், பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை ஆகியோர் ஆதரித்து பேசினர். இந்த விவாதத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய 17 காவல் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இறுதியாக பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் "ஆணையத்தின் பரிந்துரைகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட ஆட்சியர், 3 வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT