தமிழகம்

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நாளை (புதன்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சியின் அமைப்புரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, கட்சியின் அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT