பழநியில் அக்.25-ம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
அக்.25-ம் தேதி மாலை 5.21 மணி முதல் 6.23 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை காலை 11.30 மணிக்கு தொடங்கி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் முடித்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு கோயில் மற்றும் உப கோயில்களில் அனைத்தும் அடைக்கப்படும். சூரிய கிரகணம் முடிந்ததும் இரவு 7 மணிக்கு மேல் சம்ரோக்ஷன பூஜை, சாயரட்சை பூஜை, மண்டகப்படி தீபாராதனை மற்றும் தங்கரதப் புறப்பாடு நடைபெறும்.
எனவே அன்றைய தினம் நண்பகல் 12.30 மணிக்கு மேல் படிப்பாதை, வின்ச் ரயில், ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இரவு 7 மணி முதல் வழக்கம் போல் சுவாமி தரினம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
கலாகர்ஷணம்: மலைக் கோயிலில் உள்ள உற்சவர் சின்னக்குமாரர் சுவாமிக்கு இன்று (அக்.19) இரவு 8 மணிக்கு மேல் பூஜைகள் செய்து கலாகர்ஷம், ஜடிபந்தனம் நடைபெறும். நாளை (அக்.20) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சின்னக்குமாரர் சுவாமிக்கு கலசாபிஷேகம், மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பிற்பகல் 1.30 மணி வரை உற்சவர் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறாது. உச்சி கால பூஜை முடிந்து பிற்பகல் 1.30 மணிக்கு மேல் உபய அபிஷேகங்கள் நடைபெறும் என கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் தெரிவித்துள்ளார்.