பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்தை பறித்துச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பெசன்ட் லேன் பகுதியில் வசிப் பவர் சையது அலி(36). ராயப் பேட்டை நெடுஞ்சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். சையது அலி, தன்னிடம் இமிருந்த 11 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என தனக்கு அறிமுகமான நண்பரை அணுகியுள்ளார். அந்த நண்பர் பிரதீப் என்பவரை அறிமுகப் படுத்தி அவர் மூலம் மாற் றிக்கொள்ளுமாறு கூறி யுள்ளார்.
அதன்பேரில், சையது அலி ரூ.11,22,500 மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணத்துடன் கடந்த 19-ம் தேதி, தனது ஸ்கூட்டரில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி முன்பு காத்திருந்தார். அப்போது, பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் முத்துகுமார், தினேஷ், மணி, விக்னேஷ் ஆகியோருடன் அங்கு சென்று சையது அலியை தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த பணம் மற்றும் ஸ்கூட்டரை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக, நுங்கம் பாக்கம் காவல் நிலையத்தில் சையதுஅலி புகார் கொடுத்தார். இந்நிலையில் நேற்று, ஸ்டெர்லிங் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் வந்த வாகனங்களில் ஒன்று சையது அலியிடம் இருந்து பறிக்கப்பட்ட ஸ்கூட்டர் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் முத்துகுமார்(25), தினேஷ்(22), மணி(30), விக்னேஷ்(21) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைது செய்யப்பட்ட மணி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பிரதீப்(19) மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முத்துகுமார், தினேஷ், மணி, விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.