பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு பட்டயக் கணக்காளர் மற்றும் கொள்கை ஆய்வாளர் எம்.ஆர்.வெங்கடேஷ் தரும் பதில்கள் இங்கே:
இப்போது மட்டும் பலன் வந்துவிடுமா?
500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாத தால் தற்போது சிறுவணிகர்கள், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஒருமுறை இப்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த அரசின் நடவடிக்கைக்கு பெரிதாக எந்த பலனும் இல்லாதபோது இப்போது மட்டும் என்ன அதிசயம் நடந்துவிடப் போகிறது?
- அ.துரைச்சாமி, கோயம்புத்தூர்
சிறுவணிகர்களுக்கும் சாமானியர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அவர்கள் நாட்டுக்காக அந்த சிரமத்தை ஏற்றுக்கொண்டு அரசுக்கு கைகொடுக்கின்றனர்.
உடம்புக்கு வந்திருக்கும் நோய் தீரவேண்டுமானால் அறுவைச் சிகிச்சையை ஏற்றுக் கொள்வதில்லையா? அதுபோலத்தான் இந்த அறுவைச் சிகிச்சையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முன்பு கொடுத்த மருந்தின் அளவு பத்தாமல் போனதால் இப்போது கூடுதலாக மருந்து கொடுத்து நோயை குணப்படுத்தப் பார்க்கிறது அரசு. நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணத்தை செல்லாது என அறிவித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பது இதுவரை எந்த நாட்டிலும் எடுக்கப்படாத ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. இதிலே நமக்குச் சில சிரமங்கள் இருந்தாலும் நாட்டு நலனுக்காக நாம் தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்.
கறுப்பை வெள்ளையாக்க மாட்டார்களா?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறி 2000 ரூபாய் அச்சடித்தால் எப்படி கறுப்பு பணத்தை ஒழிக்க முடியும்? வங்கியில் பணம் மாற்ற வருபவர்கள் கொண்டு வரும் அடையாள ஆவணங்களை மறுபடியும் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
- பெயர் குறிப்பிடாத வாசகர்
எந்தத் திட்டத்தை செயல்படுத்தும்போதும் இதுபோல கசிவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், வீட்டில் உள்ள குப்பையில் 70 சதவீதத்தை அகற்றிவிட்டோம் என்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர 30 சதவீத குப்பை இருக்கிறதே என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
200 ரூபாய் அச்சடித்திருக்கலாமே
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 200 ரூபாய் நோட்டை வெளியிட்டிருக்கலாமே?
- சத்தியேந்திரன், நாமக்கல்
கறுப்புப் பண ஒழிப்பு யுத்தமானது ரூபாய் நோட்டுகளை மாற்றுவதோடு முடிந்துவிடாது. சட்ட சீர்திருத்தம், லஞ்சத்தை ஒழித்தல், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் என பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது. 15 லட்சம் கோடிக்கான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும்போது அதற்கு மாற்றான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வராமல் போனால் நாடு ஸ்தம்பிக்கும்.
ஸ்தம்பிக்காமல் இருக்க வேண்டுமானால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும். அதற்காக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளையே இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் புதிதாக அச்சடித்தால் விஷயம் வெளியில் தெரிந்து ஏதோ நடக்கப் போகிறது என்று சொல்லி கறுப்புப் பண புள்ளிகள் சுதாரித்து விடுவார்கள். ரகசியம் அப்படி கசிந்துவிடக்கூடாது என்பதாலேயே ராஜதந்திரமாக 2000 ரூபாயை அச்சடித்திருக்கிறார்கள்.
இல்லத்தரசி அதிகபட்சம் எவ்வளவு செலுத்தலாம்?
எனது இல்லத்தரசிக்கு ஸ்டேட் பேங்கில் கணக்கு உள்ளது. ‘பான் கார்டு’ கிடையாது. அவரது கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்.
- அங்கப்பசெட்டி, சேலம்
அவரது வங்கிக் கணக்கில் எத்தனை கோடி போட்டாலும் தாராளமாக வாங்கிக் கொள்வார்கள். 2.5 லட்சம் ரூபாய் வரை கேள்வி கேட்க மாட்டார்கள். அதற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரி துறையினர் தலையிடுவர். ‘பான் கார்டே’ தேவைப்படாமல் இருந்த உங்களுக்கு திடீரென இத்தனை லட்சம் எப்படி வந்தது என்று வழியைக் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் ஆவணத்தை தந்துவிட்டால் உங்கள் மனைவிக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
திருமணத்துக்கு பணம் கொடுக்க மறுக்கிறார்களே?
என் மகனுக்கு டிசம்பர் முதல் தேதி திரு மணம். அதற்கு பணம் தேவைப்படுகிறது. என் வங்கி கணக்கில் பணம் உள்ளது. ஆனால் வங்கிக்கு சென்றால் பணம் கொடுக்க மறுக் கின்றனர். பணத்தை பெற என்ன செய்யலாம்?
- பெயர் குறிப்பிடாத வாசகர்
காவல் துறையில் உரிய ஆவணங்களை காட்டி அத்தாட்சி கடிதம் பெற்றுச் சென்றால் திருமணச் செலவுகளுக்காக வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று முன்பு சொல்லப்பட்டது. இப்போது 2.5 லட்சம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளனர். எனினும் அப்பா கணக்கில் இருந்தும் அம்மா கணக்கில் இருந்தும் தலா 2.5 லட்சம் தாராளமாக எடுக்க முடியும். ஆனாலும், இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு வங்கிகளுக்கு இன்னும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்காததால் இதில் தெளிவு பிறக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம். திருமணத்துக்கு நாட்கள் இருப்பதால் உங்கள் வீட்டு திருமணத்துக்கு முன் நிச்சயம் பணம் கிடைத்துவிடும்.
கடன் வசூல், சீட்டு பணத்தை வங்கியில் செலுத்தலாமா?
என் நண்பருக்கு 3 தவணையாக ரூ.3 லட்சம் கடன் கொடுத்துள்ளேன். இதைத் தவிர அவரிடம் ரூ.10 ஆயிரம் வீதம் மாதாந்திர சீட்டு கட்டியுள்ளேன். அதையும் சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சம் வரும். இந்த பணத்தை வங்கியில் செலுத்தினால் பிரச்சினை வருமா?
- முருகேசன், கோபிசெட்டிப்பாளையம்
உங்களது வருமான விவரங்களை வெளிப் படையாக தெரிவிக்காமல் இருந்துவிட்டு இப்போது இத்தனை லட்சத்தை வங்கியில் செலுத்துகிறேன் என்று சொன்னால் நிச்சயம் கேள்வி கேட்பார்கள். நீங்கள் நேர்மை யானவராகவே இருக்கலாம். ஆனால், இதுபோன்ற வழிகளில் தான் கறுப்புப் பணம் நடமாடுகிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இப்போது அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது. எனவே, வருமான கணக்குக் காட்டாமல் இருந்தால் நீங்களும் அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கிறீர்கள் என்றுதான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
இன்னும் 30 ஆயிரம் செலுத்தமுடியுமா?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே என் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் சேமிப்பு வைத்திருந்தேன். தற்போது வியாபார பரிவர்த்தனைக்காக வைத்திருந்த ரூ. 1.80 லட்சத்தையும் செலுத்தினேன். டிசம்பர் 30-க்குள் இன்னும் 30 ஆயிரம் ரூபாய் செலுத்த முடியுமா?
- முகமது அலி, கோத்தகிரி
உங்களுடைய மற்ற வருமானங்கள் என்ன என்பது குறித்து நீங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை. நீங்கள் வியாபாரம் செய்வதாக குறிப்பிட்டிருப்பதால் நிச்சயம் வருமான வரி வரம்புக்குள் இருப்பீர்கள். எனவே, உங்களது முந்தைய தற்போதைய வருமான விவரங்களை உங்களது ஆடிட்டரிடம் காண்பித்து அவரது ஆலோசனைப்படி செயல்படலாம்.
பத்து லட்சத்தை வங்கியில் செலுத்தலாமா?
எங்கள் குடும்பத்து நபர்கள் சேமித்து வைத்த பணம் மொத்தமாக சேர்த்து பத்து லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளது. இதற்கு நாங்கள் எவ்வித வருமான கணக்கும் இப்போது காட்டமுடியாது. இதை வங்கியில் டெபாசிட் செய்தால் எங்கள் குடும்பத்தினர் செய்யும் தொழிலுக்கு சிக்கல் வருமோ என அஞ்சுகிறோம். இந்த பணத்தை நாங்கள் வேறு என்ன செய்யமுடியும்?
- சொக்கலிங்கம், வேளச்சேரி
உங்களது வருமானம் என்ன? உங்களது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்ற விவரம் இல்லை. இதெல்லாம் தெரியாமல் பதில் சொல்லமுடியாது. வருமான கணக்கு காட்டமுடியாது என்று சொன்னால் ஆடிட்டர் ஒருவரை கலந்தாலோசித்து உங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் போடலாம். இப்போதுள்ள விதிகளின்படி, பத்து லட்சத்தை உரிய வருமானக் கணக்கு இல்லாமல் வங்கியில் செலுத்தினால் அபராதம், வரி எல்லாம் போக பத்து சதவீதம்தான் உங்களுக்கு மிஞ்சும்.
ஹவாலாவில் ஒன்றுக்கு இரண்டாக மாற்றுகிறார்களே?
சவுதி அரேபியாவில் இருக்கும் ஹவாலா ஏஜென்ட்களிடம் 2,500 திராம்ஸ் கொடுத்தால் அந்த பணத்துக்கு இந்திய பணத்தில் 64 ஆயிரம் ரூபாய் வழக்கமாக கொடுப்பார்கள். இப்போது இங்கே கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்க நினைப்பவர்கள் 64 ஆயிரத்துக்கு பதிலாக 1,28,000 (500, 1000 ரூபாய் நோட்டுகளில்) ரூபாயை தருகிறார்கள். வளைகுடா நாடுகளில் 28 லட்சம் இந்தியர்கள் இருக்கும் நிலையில் இந்த கள்ளத் தனத்தை தடுக்க முடியுமா?
- லெட்சுமணன், சிவகங்கை
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் ஆங்காங்கே ஹவாலா ஏஜென்ட்களும் சிக்கி வருகின்றனர். என்றாலும் நீங்கள் சொல்லும் கள்ளத்தனத்தை நிச்சயமாக இந்திய அரசால் மட்டுமே தடுக்க முடியாது. இந்திய அரசு எடுக் கும் நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்