தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் இயக்கும் பணி: தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

செய்திப்பிரிவு

சென்னை மெட்ரோ ரயில் இயக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற் கான நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 43.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, பரங்கிமலை கோயம்பேடு, விமானநிலையம் ஆலந்தூர் சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு 33 ஓட்டுநர்கள் மூலமாக தினமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இயக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன் ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாகும். மெட்ரோ ரயில் இயக்கப் பிரிவில் ஏற்படும் செலவுகளை குறைக்க நிர்வாகம் இந்த முடிவு எடுத்துள்ள தாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டிஆர்டியு உதவித் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் தனியாரிடம் ஒப்பந்தம் போட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் மெட்ரோ ரயில் இயக்கப் பிரிவு என்பது முக்கிய மானது. மெட்ரோ ரயில்கள் இயக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையில் ஏற்படும் பாதிப்புகளை நிர்வாகம் பொறுப்பேற்காமல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவ னத்தை காரணம் காட்டி விடும். எனவே, மெட்ரோ ரயில்கள் இயக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் நிர்வாகமே நேரடி யாக கவனிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT