அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப்படம் 
தமிழகம்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: அதிமுக எம்எல்ஏக்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்து நாளை (அக்.19) சென்னையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள தகவல்: "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நாளை (19.10.2022 – புதன்கிழமை), சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கட்சியின் அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் N. தளவாய்சுந்தரம், MLA., தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் வழங்கி உள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT