சென்னை: "அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் கொல்லைப்புறமாக, சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்கப் பார்க்கிறார். ஒருபோதும் நடக்காது. என்றைக்கும் நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும்" என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது. " உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை துணைச் செயலாளராகவும் நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்து சுமார் இரண்டு மாத காலமாகிறது. பின்னர் நினைவூட்டல் கடிதம் இரண்டு முறை சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நேற்று வரை சரியான முடிவு எடுக்கப்படவில்லை.
நேற்று எங்களது கோரிக்கையை ஏற்காமல், ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்தவரே தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவரை அந்த இருக்கையில் அமர வைத்துள்ளனர். நியாயமாக, நடுநிலையோடு செயல்படவேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் தற்போது அரசியல் ரீதியாக செயல்படுவதை நாங்கள் பார்க்கிறோம்.
சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு. அதிகமான எம்எல்ஏக்கள் யாரை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்கின்றனரோ அவர் முதல்வராக செயல்படுவார். அதுதான் நடைமுறை. அதேபோலத்தான் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்வு செய்யப்படுவர். அதுதான் மரபு. அந்த மரபும், மாண்பும் இன்று சட்டப்பேரைவயில் சட்டப்பேரவைத் தலைவர் மூலம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்திற்கு சென்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள், எங்களுடைய கருத்துகளை தெரிவித்தோம். ஆனால் அதற்கு மாறான கருத்தை பேரவையில் தெரிவிக்கின்றனர். திமுக தலைவர் ஆலோசனையின்படி சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுகிறார் என்று நாங்கள் கருதுகிறோம்.
அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் கொல்லைப்புறமாக, சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்கப் பார்க்கிறார். ஒருபோதும் நடக்காது. என்றைக்கும் நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும். அதுதான் வரலாறு. இதன்மூலம் வேண்டுமென்றே, முன்கூட்டியே இவர்கள் செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகி இருக்கின்றன.
அதிமுகவில் இருந்துகொண்டு திமுகவோடு எங்களது கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் மறைமுகமாக செயல்பட்டு வருகிறார் என்று நாங்கள் ஊடகங்கள் வாயிலாக கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகிவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.