சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபாநாயகரை சந்தித்த இபிஎஸ் தரப்பு: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்தனர். அதிமுக சார்பில், எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றுவது தொடர்பாக இபிஎஸ் தரப்பில் இரண்டுமுறை பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நேற்றுவரை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், அந்த இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். மேலும், அதிமுகவினர் நேற்று அவை புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும் முன்னர், அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரைச் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரினர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.