ராமேசுவரம்: தொடரும் பொருளாதார நெருக்கடி|யால் இலங்கைத் தமிழர்கள் 6 பேர் நேற்று அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார் மாவட்டம், பேசாலையைச் சேர்ந்த அன்ட்ரணி டிலக்ஷன்( 24), அவரது மனைவி சனுஜியா (20), பேசாலையைச் சேர்ந்த சசிக்குமார் (47), அவரது மனைவி அந்தோணியாழ் (42), அவர்களது மகன் சனுஜன் (21), முத்தரிப்பு துறையைச் சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி (67) ஆகிய 6 பேரும் இலங்கை தலைமன்னாரில் இருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே முதலாவது தீடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையிறங்கினர்.
நேற்று அதிகாலை இந்திய கடலோரக் காவல் படையினர் ஹோவர் கிராஃப்ட் ரோந்து படகு மூலம். அவர்கள் 6 பேரையும் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பிறகு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு. 6 பேரும் விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டனர். சட்ட விரோதமாக நாட்டுக்குள் வந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு முகாமில் தங்க வைத்துள்ளது. இதுவரை கடந்த மார்ச்சில் இருந்து 182 பேர் அகதிகளாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.