பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பிறழ்சாட்சியாக மாறி பொய் சொன்னாலும், மருத்துவ ஆவணங்கள் பொய் சொல்லாது. அதன் அடிப்படையில் தண்டனை வழங்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் 2018-ல் பள்ளிமாணவி ஒருவர் டியூசன் சென்றுவிட்டு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சகோதரர்களான இளவரசன், கார்த்திக் மற்றும் அவர்களது 4 நண்பர்கள் சேர்ந்து, ஆண் நண்பரை மிரட்டி அனுப்பிவிட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 6 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் நீதிமன்றம் இளவரசன், கார்த்திக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், நண்பர்கள் 4 பேரை விடுதலை செய்தும் 2019-ல் உத்தரவிட்டது. ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி சகோதரர்கள் 2 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இதை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மாணவியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது ஆண் நண்பரும் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.ஆனால் மருத்துவ அறிக்கைகள் பொய்யாக இருக்காது.
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கும், சமூகத்துக்கும் பயந்து பாதிக்கப்பட்டோரும், சாட்சிகளும் சாட்சி சொல்வதற்கு முன்வருவதில்லை என்பதற்கு இந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
எனவே, இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.