தமிழகம்

22 ஆண்டுகளுக்குப் பிறகு பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம்

கி.தனபாலன்

பசும்பொன் தேவர் நினைவால யத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என நினைவாலயப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட தியாகியும், ஆன்மிகவாதியுமான முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர் தேவர். தேவரின் நினைவிடம், நினைவாலயமாக மாற்றப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தேவர் நினைவிடம் அருகே விநாயகர், சுப்பிரமணியர் சிலைகள் அமைக்கப்பட்டன. தேவரின் நினைவாலயத்தில் 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், 22 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தேவர் குருபூஜையுடன், கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இந்தாண்டு அக்.30-ம் தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. அக்.28 ஆன்மிக விழாவாகவும், அக்.29 அரசியல் விழாவாகவும், அக்.30 குருபூஜை விழாவாகவும் நடைபெற உள்ளது.

இந்தாண்டு அதன் சிறப்பாக அக்.28-ம் தேதி தேவர் நினை வாலய கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர், சுப்பிரமணியர் கோயிலுக்கும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி அக்.27-ல் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

அன்று மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜைகளும், 28-ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், காலை 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT