தமிழகம்

மதுரை | கல்லணை கிராமத்திற்கு அரசு பேருந்து திடீர் நிறுத்தம்: கிராம மக்கள் அவதி

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: மதுரை விமான நிலையம் அருகேயுள்ள கல்லணை கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் தினமும் 5 கிமீ தூரம் நடந்து செல்லும் நிலையில் கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்தது கல்லணை கிராமம். இங்கு லெட்சுமிபுரம், அச்சங்குளம் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கல்லணையில் ஆரம்பக்கல்வி முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். மேல்நிலைக்கல்வி படிப்பதற்கு கூடக்கோவில், பாரைப்பத்திக்கு செல்ல வேண்டும். மேலும், மருத்துவ வசதி மற்றும் வங்கிச் சேவைக்கு 4 கிமீ தூரமுள்ள கூடக்கோவிலுக்கு செல்ல வேண்டும். கல்லணை பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கல்லூரிக்கும், கூலி வேலைக்கும் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்த ஊருக்கு திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் காலை 6.30, 8.30, 11 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி வரை ஆகிய 6 முறை இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒருமாதத்திற்கும் மேலாக மதியம் 11 மணி, 2 மணி பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அருகிலுள்ள மருத்துவம் மற்றும் வங்கிச் சேவைகளுக்காக அருகிலுள்ள கூடக்கோவில், பாரைப்பத்திக்கு 5 கிமீ நடந்து செல்லும் நிலையிலுள்ளனர். மேலும் மதுரையிலிருந்து கல்லூரி முடிந்து திரும்பும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே திடீரென நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் வழக்கமான நேரத்திற்கு இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் பிரேம்குமார் கூறுகையில், "வழக்கமான நேரத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்புக்கென மதியம் 2 மணிக்கு இயக்கிய பேருந்தை மதியம் 3 மணிக்கு இயக்கினோம். ஊராட்சி தலைவர் கோரிக்கையின்படி மீண்டும் பழைய நேரத்திற்கே இயக்கி வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT