மழையினால் வயல்கள் சேறாக மாறிவிட்டதால் மார்க்கையன்கோட்டை அருகே நெல் அறுவடை இயந்திரங்கள் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன | படம்: என்.கணேஷ்ராஜ் 
தமிழகம்

தேனி | தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேக்கம்: நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு

என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் வயல்களில் நீர் தேங்கி முதல்போக நெல்லை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான அறுவடை இயந்திரங்கள் வயல் அருகே வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14ஆயிரத்து 707ஏக்கர் அளவிற்கு இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போகத்திற்காக கடந்த ஜூன் முதல்தேதியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயப் பணிகள் மும்முரமடைந்தன. தற்போது நெற்பயிர்கள் அறுவடைப் பருவத்திற்கு வந்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக காமயகவுண்டன்பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் திருச்சி, நாமக்கல், ஆத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வரை இந்த இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டு களத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்பு வியாபாரிகள் இதனை கொள்முதல் செய்து வந்தனர். கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மாலையில் பெய்யும் மழை இரவு வரை நீடிக்கிறது.

இதனால் வயல்களில் வெகுவாய் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆகவே சின்னமனூர், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, கம்பம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்காக வந்துள்ள ஏராளமான இயந்திரங்கள் அந்தந்த வயல்பகுதியிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''நெல் அறுவடை நேரத்தில் மழை பெய்து வருவதால் அறுவடைப்பணி வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. சேறுகளில் அறுவடை இயந்திரம் செல்ல முடியாது என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நல்ல மகசூல் கிடைத்தும் மழையினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது'' என்றனர்.

SCROLL FOR NEXT