கோப்பு படம் 
தமிழகம்

அனைவருக்கும் வீட்டு வசதி திட்ட செயல்பாடு: விருதுகளைக் குவித்த தமிழகம்

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் சிறப்பாக செயல்படுத்தி காரணத்திற்காக தமிழக அரசு பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் மாநில அரசின் மூலம், குடிசைப் பகுதிகளில் கள மேம்பாடு, மானியத்துடன் கூடிய கடன், பங்களிப்புடன் கூடிய வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள், பயனாளிகளால் தாமாக தனி வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட 4 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இத்திட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாகவும், பயனாளிகள் தாமாக தனி வீடுகள் கட்டும் திட்டம் பேரூராட்சிகளில், பேரூராட்சிகளின் இயக்குநகரத்தின் மூலமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு 5,60,373 வீடுகளுக்கு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 79 திட்டப்பகுதியில் முன்மாதிரி திட்டம் உட்பட 33, 651 குடியிருப்புகள் பங்களிப்புடன் கூடிய வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 93,097 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2,64, 329 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,04,071 வீடுகள் கட்டுப்பட்டு வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தரமான வீடுகளை அவர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு அருகிலேயே கட்டும் திறனுக்கேற்ற வாடகை குடியிருப்புகளை கட்டும் திட்டத்தின் கீழ் 54,385 குடியிருப்புகளை 6 திட்டப்பகுதிகளில் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உலகளாவிய வீட்டு வசதி தொழில் நுட்ப சவாலின் கீழ் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் முன் மாதிரியான வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த விருதுகள், திட்டத்தினை செயல்படுத்த போட்டி சூழலை ஏற்படுத்தவும் விரைவாக பணியை முடிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மேலும், திறனுக்கேற்ற வாடகை வீட்டு வசதி குடியிருப்புகள் மாதிரி 2-ன் கீழ் விரைவாக வீடுகள் கட்டுவதில் சிறப்பு அங்கீகாரம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் சிறந்த மாநிலம், சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3-வது இடம், சிறப்பாக செயல்பட்ட பேரூராட்சிகளில் பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5வது இடம் உள்ளிட்ட விருதுகளை தமிழகம் வென்றுள்ளது.

SCROLL FOR NEXT