தமிழகம்

மாணவி சத்யா கொலை வழக்கு: சிசிடிவி ஆதாரம் சிக்கியது; கைதான சதீஷை காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில், மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்ட சிசிவிடி வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா (20), அதேபகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவரால் கடந்த 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி, சதீஷைக் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து, ரயில்வே போலீஸார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை, சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 15-ம் தேதி பிற்பகலில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நிகழ்ந்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ரயில் நிலையம்,அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் சதீஷ், மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது முதல்கட்ட விசாரணைமுடிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக மாணவியின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில்பார்த்து தனியார் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வகையில் இன்று (அக். 17) ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் மாணவியின் தாயும், தலைமைக் காவலருமான ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அருகில் வசிப்பவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து, மாணவி படித்த தனியார் கல்லூரியிலும், மாணவியின் தோழிகளிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். பின்னர், சதீஷின் குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.

இளைஞர் சதீஷ், மாணவி சத்யாவைப் பின் தொடர்ந்தது முதல், அவரை ரயில் முன் தள்ளிவிட்டது வரையிலான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீஸார் திரட்டி வைத்துள்ளனர்.

மேலும், வரும் வாரத்தில் சதீஷை5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து, விரைவில் சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவோம் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT