தமிழகம்

தீபாவளி | அக்.21 முதல் கோவையில் இருந்து பேருந்து புறப்படும் இடங்கள் மாற்றம்

செய்திப்பிரிவு

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வரும் 21-ம் தேதி முதல் சூலூரில் இருந்து புறப்படும். மேலும், 240 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

தீபாவளிப் பண்டிகையை கொண்டாட கோவையில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பேருந்து புறப்படும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும். சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக கோவையிலிருந்து மதுரைக்கு 100 சிறப்பு பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும், திருச்சிக்கு 50 பேருந்துகளும், சேலத்துக்கு 50 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட அனைத்துப் பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம், உக்கடம் நகரப் பேருந்து நிலையங்களிலிருந்து இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT