தமிழகம்

உடுமலை சுற்றுப்பகுதிகளில் கனமழை குடிசைகளை சூழ்ந்த வெள்ளம்

செய்திப்பிரிவு

உடுமலை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. அதனால்சாலைகளில் மழை நீர் தேங்கி,ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளமாக தேங்கியது. ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா காலனி, புதுக்காலனி குடியிருப்புகளில் மழை நீர் ஆறாக ஓடியது.

குடிசை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனர். மழை நீர் வடிகாலுக்கான வசதி இல்லாததால் பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கனகராஜ் கூறியதாவது: ஜல்லிபட்டி பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலி தொழிலாளர்கள். இங்கு பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் அமைப்பு மழை நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது.

முறையாக மழை நீர் வெளியேற எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. தற்போது மழை நீர் குடிசைகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் அளித்தும் தொடர்புடைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT