தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை முடிந்து, தற்போது சம்பா நடவுப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 4 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தற்போது 30 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.
ஆண்டுதோறும் சம்பா, தாளடி நடவுப் பணிக்காக, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பெண் தொழிலாளர்கள், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு சம்பா நடவுப் பணிக்கு அவர்கள் வந்து செல்கின்றனர்.
இது குறித்து விவசாய பெண் தொழிலாளர்கள் கூறியது: அரியலூர் மாவட்டத்தில் தற்போது விவசாயப் பணி குறைவாக உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நடவுப் பணிக்கு வந்து செல்கிறோம். பெண் தொழிலாளர்கள் 15 பேருக்கு, ஒரு ஏக்கருக்கு நாற்று நடவு செய்ய ரூ.2,500, ஆண் தொழிலாளர்கள் 15 பேருக்கு, ஒரு ஏக்கருக்கு நாற்று பறிக்க ரூ.2,500 வழங்கப்படுகிறது.
இந்தத் தொகையை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். தீபாவளி பண்டிகை செலவுக்காக இது பயனுள்ளதாக இருக்கும் என்றனர். இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறியது: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் நடவுப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, வழக்கம்போல சம்பா, தாளடி நடவுப் பணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்.