தமிழகம்

துறையூர் அருகே விபத்தில் 3 மாணவர்கள் பலி

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் உள்ள தனியார் கல்லூரியில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார்(19), தோப்பூர் அருகே உள்ள செட்டிக் கோம்பையைச் சேர்ந்த அசோகன் மகன் கவுதமன்(19), ஈரோடு மாவட்டம் பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் ரோகித்(19) ஆகியோர், விடுதியில் தங்கி பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

நவீன்குமாரின் தலையில் ஏற்கெனவே காயம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த இடத்தில் திடீரென வலி அதிகரித்தது. இதையடுத்து கவுதமன், ரோகித் ஆகியோர் நவீன்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, சிகிச்சைக்குப் பின் நள்ளிரவில் மீண்டும் விடுதிக்கு புறப்பட்டனர்.

கொத்தம்பட்டி அருகே சென்றபோது, பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதில் நவீன்குமார் உள்ளிட்ட 3 பேரும் சில அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். துறையூர் போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT