வேந்தர் மூவீஸ் நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன் 6 மாத கால தலைமறைவுக்குப் பிறகு தனிப்படை போலீஸாரால் திருப்பூரில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, திருப்பூர் அருகே அவிநாசி சாலையில் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஆர்.ஜி. கார்டன் பகுதியில் உள்ள பெண் ஒருவரது சொகுசு வீட்டில் கடந்த 19-ம் தேதி முதல் மதன் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்ததை தனிப்படை போலீஸார் உறுதி செய்துகொண்டனர். பின்னர் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து நோட்டமிட்டனர்.
நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்த பெண் ஒருவரும், மதனும் காரில் வெளியே சென்றுவிட்டு வந்தனர். இதன் பின்னர் அதிகாலை வேளையில் அதிரடியாக நுழைந்த தனிப்படை போலீஸார், வீட்டின் ரகசிய அறையில் இருந்த மதனை கைது செய்தனர்.
மதன் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெண் தற்போது அந்த வீட்டில் இல்லை. அவர் எங்கு உள்ளார்? போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனரா என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. அந்த வீடு தற்போது பூட்டப்பட்டுள்ளது. அருகே இருந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த வீட்டில் இருந்த பெண் அவ்வப்போது வந்து செல்வாராம்.
மேலும் பணக்கார பெண்கள் சிலர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது உண்டு எனத் தெரிவித்தனர். உள்ளூர் போலீஸாரிடம் விசாரித்தபோது அவர்களுக்கு மதன் கைது விவரம் மாலையில்தான் தெரியவந்ததாகக் கூறினர்.