தமிழகம்

ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் தாயனூர் பழங்குடியின மக்கள்: மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

“வங்கியும் தெரியாது, வங்கிக் காசோலையோ, பணப் பரிவர்த்தனை செய்யும் சலான் ரசீதுகள் குறித்தும் தெரியாது. காடு, மலைகள் கடந்து, வன விலங்குகளுக்கு பயந்து, இங்கே வந்து 2, 3 நாள் காத்திருந்து செல்லாத நோட்டை மாற்ற வேண்டியிருக்கு. இதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்க சாமி” என்று புலம்பித் தவிக்கிறார்கள், தாயனூரை மையமாக வைத்து இயங்கும் 60-க்கும் மேற்பட்ட பழங்குடி கிராம மக்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் பகுதியில் அடர்ந்த மலைக்காடுகளினூடே பட்டிசாலை கோபனாரி, தோலம்பாளையம், சீலியூர், மேல்பாவி, காலனிப்புதூர், கோலப்பதி, சீங்குழி, வேப்பமரத்தூர், தோண்டை, சிறுகிணறு, குண்டூர் என 60-க்கும் பழங்குடியின கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களில் தலா 50 முதல் 200 குடும்பங்கள் என, மொத்தம் 10 ஆயிரம் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.

விலங்குகள் நடமாட்டம்

இந்த பழங்குடி மக்கள், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு வருவதென்றாலும் யானை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடும் அடர்ந்த காடுகளை சுமார் 3 முதல் 8 கிலோமீட்டர் வரை கடந்து வரவேண்டும். அங்கிருந்து பேருந்து பிடித்து நகரப் பகுதிகளுக்கு வரவேண்டும்.

வனப் பொருட்கள் சேகரிப்பும், கட்டிட, விவசாய கூலி வேலைகளுமாக அலையும் இவர்களில் 90 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கே கிடையாது.

முதியவர்கள் பலருக்கு வங்கி என்றால் என்னவென்றே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் வேலைக்குச் சென்று ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வீட்டில் சேமித்து வைத்துள்ளனர்.

அதை மாற்ற அவர்கள் 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாயனூர் கிராமத்துக்கு வரவேண்டியுள்ளது. இங்கே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டுமே உள்ளது. அந்த வங்கி ஊழியர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார விவசாயக் குடிமக்களின் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரவே பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இரவில் தங்கும் மக்கள்

இதில், பழங்குடியின மக்களின் நோட்டுகளை மாற்றித் தருவது எப்படி முடியும்? பணம் மாற்றுவதற்காக வங்கி வாயிலில் காத்திருக்கிறார்கள். வங்கி நேரம் முடிந்து விட்டால் ஊருக்கே போகாமல், அங்கங்கே படுத்து உறங்கி, அடுத்த நாள் வங்கியில் கஷ்டப்பட்டு பணமாற்றம் செய்து, பின்னர் ஊருக்குத் திரும்பிச் செல்கிறார்கள். இந்தக் கொடுமை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தாயனூர் கிராமத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இதுகுறித்து இங்கு பணமாற்றம் செய்ய வந்த பழங்குடி மக்கள் கூறியதாவது:

எங்களுக்கு இந்த நோட்டுகள் செல்லாதுன்னு அறிவித்ததே தெரியாது. ஏன்னா எங்ககிட்ட டிவி கிடையாது. டிவி இருக்கிறவங்களும் செய்திகளை பார்க்கறது கிடையாது. ஊர்க்காரங்க வந்து பேசினபோதுதான் தெரியவந்தது. நாங்க சேர்த்தி வச்சிருக்கிறதே நாலஞ்சு பெரிய நோட்டு. அதுவும் மாசக்கணக்குல, வருஷக்கணக்குல குருவி சேர்த்தற மாதிரி சேர்த்து வச்சிருக்கோம். இதை எப்படி விடமுடியும். இங்கே வந்தாத்தான் தெரியுது. அந்த நோட்டை பத்தி ஒரு பேப்பர்ல எழுதணும். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு கியூ நிற்கணும்ன்னு.

ஒண்ணுல நின்னா, கடைசியில போன பின்னாடி வேற க்யூவுல போய் நிக்கச் சொல்றாங்க. எங்களுக்கு நோட்டை (படிவம்) எழுதித் தரவும் ஆளில்லை. ஏதோ நாலஞ்சு உள்ளூர் காலேஜ் பசங்க எங்களுக்கு எழுதித்தர முன்வர்றாங்க. அப்பவும் நாங்க காத்திருந்து பேங்க் டைம் முடிஞ்சு போகுது. அதுக்கு முன்னாடியே பணம் வாங்கிட்டா கூட ஊருக்கு போற கடைசி பஸ்ல போக முடியாது. போனாலும் 3 மைல் , 4 மைல் காட்டுக்குள்ளே நடக்கணும்.

இப்பவெல்லாம் காட்டுல நிறைய யானைங்க நடமாட்டம் இருக்கு. அதனால இங்கேயே தூங்கி எழுந்திருச்சே போறோம். எங்க ஜனங்களுக்கு இந்த நோட்டை மாத்த வேற ஏற்பாடு செஞ்சு கொடுத்தா புண்ணியமா போகும் என்றனர்.

தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்…

தாயனூரில் பழங்குடியின மக்களுக்கு படிவம் எழுதி உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் கூறியது: இங்கு வரும் பழங்குடியின மக்களில் 90 சதவீதம் பேருக்கு எழுதப் படிக்கவே தெரியவில்லை. அவர்கள் வைத்திருக்கும் நான்கைந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளையும் அவ்வளவு சுலபமாய் யாரிடமும் நம்பித் தருவதில்லை. அவர்கள் யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் நிரம்பியிருப்பது நியாயமானதே.

எனவே, மாற்றுத் திறனாளிகள் முதியோருக்கு உதவுவதுபோல, பழங்குடியினருக்கு உதவ அரசுத் தரப்பிலோ, வங்கித் தரப்பிலோ தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது இதுபோல பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில் வங்கிகள் மூலம் முகாம்கள் நடத்தி, புதிய நோட்டுகளைப் பெற உதவ வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT