தமிழகம்

விவசாயிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: வாசன்

செய்திப்பிரிவு

விவசாயிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் விவசாயத் தொழில் நலிவடைந்து வருகிறது. குறிப்பாக சம்பா மற்றும் குறுவை சாகுபடி செய்யும் காலத்தில் தேவையான அளவிற்கு மழை பெய்யவில்லை, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரும் முழுமையாக வரவில்லை. சில நேரங்களில் கனமழை, வெள்ளம், இயற்கைச் சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் வாடுவதைக் கண்டும், விவசாயக் கடனை கட்ட முடியாத கவலையிலும், கடனைக் கேட்டு வங்கிகள் எடுக்கும் கெடுபிடி நடவடிக்கைகளாலும், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்க முடியாததாலும் மனம் உடைந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவையாறு அருகே கீழ்த்திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ் கண்ணன் என்பவர் விவசாயம் பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் நேற்றைய தினம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி என்பவரும் பயிர் வாடியதைக் கண்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவையாறு மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த இறந்து போன விவசாயிகள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்.

கடந்த 15 நாட்களில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட ஈரோடு மாவட்டததையும் சேர்த்து இது வரை 11 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்கள். விவசாயிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

காரணம்: விவசாயத் தொழில் பாதிக்கப்படும் போது அதற்காக மத்திய, மாநில அரசுகள் விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, வங்கிகள் கெடுபிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதற்கும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்திடவும், மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கும், இலவசமாக இடு பொருட்கள், விதைகள் போன்றவற்றை வழங்கிடவும், தொடர் விவசாயத்திற்கு கடனுதவி செய்திடவும் போன்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு மத்திய, மாநில அரசுகள் செயல்படாத காரணத்தால் விவசாயத் தொழில் பாதிக்கப்படும் போது, விவசாயிகள் மனம் உடைந்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் எச்சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

மேலும் விவசாயிகள் நலன் காக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். குறிப்பாக விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றி விவசாயத் தொழிலை தொடர்ந்து லாபகரமான தொழிலாக மேம்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT