சென்னை: திமுகவின் இந்தி திணிப்பு நாடகத்தை கண்டித்து பாஜக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி எதிர்ப்பு.1966 முதல் 2022-ம் ஆண்டு வரை திமுக செய்த சாதனை தமிழக அரசுப் பள்ளியில்கூட தமிழை கட்டாயமாக்காததுதான். புதிய கல்விக் கொள்கை மூலமே தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் நடத்தும் பள்ளியில்கூட தமிழ் கட்டாய பாடமாக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டில் எங்கும் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை கட்டாயமாக தமிழகத்தில் கொண்டு வர மாட்டோம். இந்தி திணிப்பு என்ற பெயரிலான திமுகவின் போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.
ஐஐஎம், ஐஐடியில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று கூறிய மத்திய அரசின் அறிக்கை உண்மை என்றால் முதல்வர் அதை காட்ட வேண்டும்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவின் இந்தி திணிப்பு கபட நாடகத்தைக் கண்டித்து பாஜக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். பரந்தூர் விமான நிலைய நிலம் தொடர்பான பிரச்சினைகளை திமுக சரியாக கையாளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.