மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக ஆர்ப்பரித்து வெளியேறிய காவிரி நீர். படம்: எல்.பத்மநாபன் 
தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலம் நீடிப்பதால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், கடந்த ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டிநிரம்பியது.

தற்போது, காவிரியில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. நீர் வரத்து நேற்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடி, காலை 10 மணிக்கு 1 லட்சம் கனஅடி, மாலை 4 மணிக்கு 1.10 லட்சம் கனஅடி என படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த உபரி நீர் முழுவதும் அணையில் இருந்து டெல்டாவுக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக நீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து, அணையின் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடி, அணையின் 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 1.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT