சென்னை: கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.
சென்னையில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் இணைத்து பொது போக்குவரத்தை பொதுமக்களுக்கு ஏற்ற போக்குவரத்தாக மாற்ற சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள மந்தவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது. இந்த ரயில் நிலையங்கள் 4 முதல் 8 தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது உள்ளது. இவற்றில் 20,44,400 ச.மீ அளவில் இடங்கள் உள்ளது.
இந்த இடங்களில் வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.