தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து விவாதம்

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை நேற்று மாலை 6.10 மணிக்கு கூடியது. 7 மணிவரை இக்கூட்டம் நடைபெற்றது.

துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி மற்றும் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சமீபத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, இதற்கான மசோதா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இந்த சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி அனுமதியளிக்கப்பட்டது.

இதுதவிர, சமீபத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு பயணித்து, பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து, பல்வேறு முதலீடுகள் தமிழகம் வரஉள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தமிழகத்துக்கு வரும் புதிய தொழில்முதலீடுகள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி, சலுகைகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நெல் கொள்முதல்

தமிழகத்தில் தற்போது, குறுவையைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. விரைவில் பருவமழைக்காலம் தொடங்கும் நிலையில் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் வரும்போது, அதனை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.

மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையாத வகையில் பாதுகாப்பது, கிடங்குகள், அரவைக்கு அனுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வருவாய், உணவு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் செய்துள்ள முன்னேற்பாட்டு பணிகளை முதல்வர் கேட்டறிந்தார்.

முதல்வர் அறிவுரை

அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில், சட்டப்பேரவையில் செயல்படுவது குறித்த அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார். குறிப்பாக, எதிர்தரப்பில் ஆத்திரமூட்டும்வகையில் யாரேனும் பேசினாலும், அமைச்சர்கள் யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது. அமைதியாக பதிலளிக்க வேண்டும். பொது இடங்களில் பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகள் வருவதால், சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம்.

அமைச்சரவையில் மாற்றம் செய்ய நிர்பந்திக்கும் அளவுக்கு யாருடைய செயல்பாடுகளும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT