ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் நிலங்களை அளக்க விரைவில் டெண்டர் கோர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்பதற்காக, கர்நாடகாவில் உள்ளது போல ஒருங்கிணைந்த சிறப்பு அதிரடிப் படையை அமைக்கக் கோரி, வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு ஆவணங் களில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள காலி நிலங்கள் மற்றும் ஆக்கிர மிப்புகளின் நிலவரம் குறித்த பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும், முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆக்கிரமிப்புப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும், 32 மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகளை துல்லியமாக கணக்கிட ஜிபிஎஸ் கருவிகளை வாங்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ஜிபிஎஸ் கருவிகள்
தமிழக அரசு சார்பில் வருவாய்த்துறைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஜிபிஎஸ் கருவிகளை மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மூலம்தான் வாங்க வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பு குறித்த கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி முடிக்க 8 ஆண்டுகள் ஆகும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதிகள், ‘‘அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறியும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனாலும், மாநில அரசு அந்த நிதியை முறையாக பயன்படுத்தி நவீன தொழில்நுட்பத்தில் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்ய காலதாமதம் ஆகும் என்கிறது. எனவே, 2 ஆண்டுகளுக்குள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மீட்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வருவாய்த் துறைச் செயலர் சந்திரமோகன், நில நிர்வாகத் துறை ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், நில அளவைத் துறை ஆணையர் ஜிதேந்திரநாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் நில அளவீட்டுக்கான டெண்டர் பணிகள் தயாராக உள்ளதாகவும், ஆனால் டெண்டர் கோரிய பிறகு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்காவிட்டால் பிரச்சினை ஏற்படும் எனவும் நீதிபதிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தர விட்டனர். மேலும், ‘‘மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி மாநில அரசின் தேவை என்ன என்பது குறித்து விவாதித்து விரைவில் நிலஅளவைக்கான டெண்டர் கோர வேண்டும்’’ என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.