காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸாரிடம் ஆதரவு கோரி சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருகை தந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

உதய்ப்பூர் பிரகடனமே எனது வாக்குறுதி: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உதய்ப்பூர் மாநாட்டுப் பிரகடனமே எனது தேர்தல் வாக்குறுதி என்று தமிழக காங்கிரஸாரிடம் ஆதரவு கோரிநேற்று சென்னை வந்த காங்கிரஸ்கட்சித் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் 17-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 9 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 700 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழக காங்கிரஸாரின் ஆதரவு கோரி அண்மையில் சசிதரூர் சென்னை வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். அவரை கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றார். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, கட்சியினர் மத்தியில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடும்பத்தில் ஒருவரே போட்டி: தொண்டர்கள் அழைத்ததால் இப்பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். நான் 1969-ம் ஆண்டு இந்திராகாந்தி முன்னிலையில் கர்நாடக மாநிலம் குல்பர்கா ஒன்றிய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றேன். கட்சிக்காக கடுமையாக உழைத்ததால் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறேன். நான் எந்ததேர்தல் வாக்குறுதியும் தயாரிக்கவில்லை. கடந்த மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு பிரகடனமே எனது தேர்தல் வாக்குறுதி. அதில் கட்சி நிர்வாகிகளில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கே தேர்தலில் போட்டியிட அனுமதி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர் குறைந்தது 5 ஆண்டுகள் கட்சியில் இருந்திருக்க வேண்டும். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என இடம்பெற்றுள்ளது. நான் வெற்றி பெற்றால் இவற்றைச் செயல்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், புதுச்சேரி யூனியன் பிரதேச முன்னாள் முதல்வர்கள் வி.நாராயணசாமி, வி.வைத்திலிங்கம், கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகர், துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் எஸ்.காண்டீபன், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், டில்லிபாபு, எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT