தமிழகம்

மழையால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து காவலர்: ராஜபாளையம் பொதுமக்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து காவலரைப் பொதுமக்கள் பாராட்டினர். ராஜபாளையம் நகரில் பாதாளச் சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளுக்காக நகரின் பிரதான சாலைகள் முதல் குறுக்குத் தெருக்கள் வரை தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளன.

நகரில் போக்குவரத்து மிகுந்த காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் சாலையை தோண்டிய இடம் பள்ளமாக இருந்தது. ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் இப்பள்ளம் தெரியாத அளவு மழை நீர் தேங்கி, மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து காந்தி சிலை ரவுண்டானாவில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பெரியசாமி, மண் மற்றும் கற்களைக் கொண்டு பள்ளத்தை மூடினார். வணிக நிறுவனங்கள் மிகுந்த இப்பகுதியில் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT