பருவமழை பாதிக்கப்பட்டுள்ள தால், நீர் ஆதாரங்களில் தண்ணீர் குறையும் போது, தனியார் கிணறுகள், சமுதாய கிணறுகளைத் தூர்வாரி நீர் தரத்தைப் பரிசோதித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம், சென்னை பெருநகர் குடிநீர் வாரியம், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய செயல் பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி ஆய்வு செய்தார். அப்போது நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தங்கு தடையின்றி சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தாமத மாகியுள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி குடிநீர் வழங்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோ கத்தை களப்பணியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தேவைக்கேற்ப குளோரின் கலந்த நீரை தினசரி விநியோகிக்க வேண்டும். சென்னையில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்க திட்டம் வகுக்க வேண்டும். தனியார் விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுக்க கிணற்று தளங்களை உடனடியாக முடிவு செய்ய வேண்டும். நீர் நிலைகளுக்கு அருகில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் எடுத்து விநியோகிக்க வேண்டும்.
நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 100 சதவீதம் குடிநீரை தயாரித்து விநியோகிக்க வேண்டும். பழுதடைந்த குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத பொதுக் கிணறுகளைத் தூர்வாரி சுத்தம் செய்து குடிநீர் குடிப்பதற்கு தகுதியானது என்பதற்கான சான்று பெற்று பயன்படுத்த வேண்டும். பொறியாளர்கள் அனைவரும் தினசரி குடிநீர் விநியோக நேரங்களில் களத்தில் ஆய்வு செய்ய வேண்டும். லாரிகள் செல்ல முடியாத குறுகிய சாலைகளில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய வாகனங்கள் மூலம் விநியோகிக்க வேண்டும்.
குடிநீர் வழங்கும் லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தி 30-40 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும், குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்க ஒவ்வொரு பகுதியிலும் வார்டு வாரியாக தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த வேண்டும். நீராதாரங்களில் நீர் மட்டம் குறைந்தால் தனியார் கிணறுகள், சமுதாய கிணறுகளைத் தூர்வாரி நீரின் தரத்தை சோதித்து பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும். நீராதாரம் குறையும் பகுதிகளில் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறையின் செயலர் பனீந்திர ரெட்டி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் விக்ரம் கபூர், குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தீரஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், ஊரக வளர்ச்சி இயக்குநர் கா.பாஸ்கரன், பேரூராட்சிகள் இயக்குநர் வி.ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.