மதுரை: வார்டு மக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், எத்தனை நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கேட்ட கேள்விக்கு மதுரை மாநகராட்சி 7 நாள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று பதில் அளித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மதுரை தாசில்தார் நகர் 37வது வார்டில் சித்திவிநாயகர், வ.உசி.1, 2, 3 தெருக்கள், சித்தி விநாயகர் காயில் தெரு, அண்ணா தெரு, அன்னை அபிராமி தெரு, எழில் வீதி, கலைஞர் தெரு, திரு.வி.க.தெரு, குறிஞ்சி தெரு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குழாயில் குடிநீர் விநியாகம் செய்யப்படாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று புகார் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள், மாநகராட்சியில் முறையிட்டும் தற்போது வரை குடிநீர் விநியோகம் சரி செய்யப்படவில்லை.
இதுகுறித்து தாசில்தார் நகரை சேர்ந்த பாட்ஷா என்பவர், மாநகராட்சிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அதில் ஒரு கேள்வியாக, ‘‘தற்போது மதுரை மாநகராட்சியில் வார்டு 37ல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் குழாய் இணைப்பு பெற்றவர்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது’’ என்று கேட்டுள்ளார்.
அந்த கேள்விக்கு மாநகராட்சி நிர்வாகம், ‘‘வார்டு 37-ல் உள்ள பகுதிகளுக்கு காவேரி கூட்டுக்குடிநீர் வாரியத்தால் வழங்கப்படும் தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. வார்டு 37ல் உள்ள தெருக்களுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வழங்க திட்டமிட்டு அதன்படி தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு சில சமயங்களில் குடிநீர் குழாய் கசிவு, மின்சார தடை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவேரி தண்ணீர் வழங்கப்படவில்லை என்றால் குடியிருப்பு பகுதிகளுகக்கு குடிநீர் வழங்க 7 நாட்களுக்கு மேல் ஆக வாய்ப்புள்ளது’’ என்றார்.
மாநகராட்சி நிர்வாமே ஒருவார்டில் பொதுமக்கள் கேட்ட ஆர்டிஐ கேள்விக்கு 7 நாட்கள் அல்லது அதற்கு மேல் நாளாகும் என்று கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாட்ஷா கூறுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டுவரை மாநகராட்சி நிர்வாகம் முறையாக எங்கள் பகுதிக்கு காவேரி கூட்டுக்குடிநீர் வழங்கியது. ஆனால், தற்போது வாரத்திற்கு ஒரு முறை கூட குடிநீர் வழங்கவில்லை. லாரி தண்ணீரும் முறையாக வருவதில்லை. ஆண்டிற்கு ஒரு குடிநீர் இணைப்பிற்கு ரூ.900 கட்டணமாக கட்டுகிறோம். ஆனால் குடிநீர் வரி பெற்றுக் கொண்டு குடிநீர் வழங்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்’’ என்றார்.