தமிழகம்

பேருந்து நெரிசலில் சிக்காமல் இருக்க பள்ளி மாணவர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் யோசனை

கி.மகாராஜன்

மதுரை: “பேருந்துகளில் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க மாணவர்கள் வீடுகளிலிருந்து முன்கூட்டியே பள்ளிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும்” என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. படிக்கட்டில் தொங்கியபடி கால்களை சாலையில் உரசி சாகசம் செய்வது உட்பட பல்வேறு செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்தச் சம்பவங்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க போலீஸாரும், போக்குவரத்து துறையும் பல்வேறு அறிவுரைகள் வழங்கியும் படிக்கட்டு பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 'பாதுகாப்பான பேருந்து பயணம்' குறித்து விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் பேசியதாவது:

“பள்ளி, கல்லூரி தொடங்கும், முடியும் நேரங்களில் மாணவர்கள் மொத்தமாக பயணம் செய்வதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி தொடங்கும் நேரங்களில் பேருந்துகளை பிடிக்க வீடுகளிலிருந்து முன்கூட்டியே புறப்பட வேண்டும். பள்ளி முடிந்த பிறகு பேருந்து நிறுத்தங்களில் சில நிமிடங்கள் காத்திருந்து பேருந்துகளில் ஏற வேண்டும். இவ்வாறு காத்திருப்பதால் பேருந்துகளில் நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய முடியும்.

மதுரை கோட்டத்தில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் 890 சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை கோட்டத்தில் 5 லட்சம் பெண்கள் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். 1.68 கோடி பேர் இலவச பயணம் செய்கின்றனர். 2022- 2023 ஆண்டில் 4.13 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT