உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

நீட் தேர்வு வழக்கு | தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 12 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு 

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 12 வாரத்துக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது

அதில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்பையில் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, "மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021" என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா குடியரசு தலைவரின் முன்பு பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கை 12 வாரம் ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 12 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

முன்னதாக, நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 2020-ல் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளதால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்ககப்பட்டுள்ளனர். இதுவரை நீட் தேர்வு வேண்டாம் என்றே கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் அறிவிக்கைக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதுதான் நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு கொண்டு வந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கால அவசாகம் கோரக்கூடாது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT