தமிழகம்

சேதமடைந்த பாலத்தை சீரமைத்த தண்டலை பள்ளி மாணவர்கள் விருதுக்கு தேர்வு

செய்திப்பிரிவு

குஜராத்தை சேர்ந்த ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு நடத்திய போட்டியில், சிறந்த 100 பள்ளிகளில் திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேர்வு பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ என்ற அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித குலத்தை நல்வழிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்குத் தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் பள்ளிகளுக்கிடையேயான ‘ஐ கேன் சேஞ்ச்’ என்ற தலைப்பிலான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் கிராமத்தில் பழுதடைந்திருந்த பாலத்தின் கைப்பிடிச்சுவரை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சீரமைத்ததை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியிருந்தனர்.

சமுதாயத்துக்கு உதவிய மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டும் வகையில் விருதுக்கு இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 27 மாநிலங்களைச் சேர்ந்த 3,610 பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. இதில், சிறந்த 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 100 பள்ளிகளில் ஒன்றாக தண்டலை ஊராட்சி ஒன்றியப் பள்ளியும் இடம்பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த முயற்சிக்கு வழிகாட்டி ஆசிரியரான புண்ணியமூர்த்தி மற்றும் ஒரு மாணவர் செல்லவுள்ளனர்.

கடந்த ஆண்டு, இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் சேர்ந்து தங்களது பள்ளியில் மேற்கூரையின்றி இருந்த கழிவறைக்கு உபயோகமற்ற பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கூரை அமைத்ததற்காக, இதே அமைப்பு நடத்திய போட்டியில் பங்கேற்று விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT