சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மிகவும் தொன்மையான சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி வந்த சுபாஷ்கபூரை, சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, ஜெர்மனி குடியுரிமை பெற்ற சுபாஷ் கபூரை இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, சிபிஐயிடம் அந்த நாடுஒப்படைத்தது. இதையடுத்து, கடந்த 2011-ல் தமிழக போலீஸிடம் சுபாஷ் கபூரை ஒப்படைத்தனர். சுபாஷ் கபூர் மீது தமிழகத்தில் மட்டும் சிலை கடத்தல் தொடர்பாக 5 வழக்குகள் உள்ளன. இவைதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதில்உடையார்பாளையம் சிலை கடத்தில் வழக்கில் கடந்த 2017-ல்குற்றப்பத்திரிகை தாக்கலானது.
சுபாஷ் கபூர் மீதான வழக்கு,கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, சுபாஷ்கபூரை திருப்பியனுப்பும்படி மத்தியஅரசை ஜெர்மனி அரசு கேட்டுள்ளது. இது தவிர, குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தையும் முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுபாஷ்கபூரை திருப்பியனுப்புவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் க்வார்ட்ரா, இதுகுறித்துதமிழக தலைமைச் செயலர் இறையன்புவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர்அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, உடையார்பாளையம் சிலை கடத்தல் வழக்கு விசாரணையை விரைவாக முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு போலீஸார்கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் சுபாஷ் கபூர்தண்டனை பெற்றாலும், அவர் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருப்பதால், விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது. விடுதலை செய்யப்பட்டால் அவர் உடனடியாக ஜெர்மனி திரும்பினால், மற்ற 4 வழக்குகளின் நிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கவலை கொள்கின்றனர். பிரதமர் மோடி விரைவில் ஜெர்மனி செல்லஉள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.