தமிழகம்

சாலையோர மரங்களைச் சுற்றி கான்கிரீட்: நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம்- 3 வாரம் அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னையில் சாலையோர மரங் களைச் சுற்றி கான்கிரீட் அமைத் ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நெடுஞ்சாலைத்துறை 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பி.எட்வின் வில்சன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங் களைச் சுற்றி சுமார் 1 மீட்டர் சுற்றள வுக்கு இடம் விடாமல், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலைகள், நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன.

இதனால், மரங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் அழிந்துவிடும் நிலை உள்ளது. சாலைகளை அமைக்கும்போது, மரங்களைச் சுற்றி 1 மீட்டர் சுற்றளவுக்கு இடம் விட்டு அமைக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கில், மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய் யப்பட்டது. அதில், ‘மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சாலைகளில் மொத்தம் 33,090 மரங்கள் உள்ளன. அதில் 19,044 மரங்களைச் சுற்றி கான்கிரீட் போடப்பட்டுள்ளது. அதைச் சுற்றி, கான்கிரீட்கள் அகற்றப்பட்டு, மழை நீர் செல்ல ஏதுவாக ஜன்னல் போன்ற கான்கிரீட்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பணிகள் விரைவில் முடிக்கப்படும். சென்னை மாநகரப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகளும் உள்ளன. அதில் உள்ள மரங்களை அத்துறையே பராமரித்து வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் எம்.எஸ்.நம்பியார், தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து, ‘‘மாநகராட்சி தாக்கல் செய்த பதில் மனு குறித்து, மனுதாரர் 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள மரங்கள் குறித்து அத்துறை, 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT