சென்னை: சென்னை விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி, ரேடியோ சிட்டி சார்பில் நெசவாளர் கண்ணொளி திட்டம் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
இதில், விஷ்ணு பிரசாத் எம்பி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: நெசவாளர்களுக்கு கண் என்பதே மூலதனம். கரோனா காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகைக்கான காப்பீட்டை புதுப்பிக்க முடியாத சூழல் இருந்தது. இதை சரி செய்ய ஆட்சியில் இல்லாதபோதும் முயற்சித்தோம். ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில்சாயக் கழிவுகள் சரியாக முறைப்படுத்தப்படாததால், துணிகளுக்கு சாயம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதற்காக பட்டு பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே, 23 ஏக்கர் நிலம் வாங்கி அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைத்தறித் துறை அமைச்சர் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டு, பட்டு பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் பேசும்போது, ‘‘உலகம் முழுவதும் 130 மில்லியன் மக்களுக்கு பார்வையில்லை. இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் பேர் பார்வையற்ற நிலையில் உள்ளனர். ஒரு நொடிக்கு ஒருவர் கண் பார்வை இழக்கிறார். சென்னை விஷன் சாரிட்டபிள் அறக்கட்டளையுடன் இணைந்து 1.15 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்துள்ளோம். தொடர்ந்து கிராமப்புற மக்களுக்கும் நேரடியாக சென்று சேவை வழங்கி வருகிறோம்" என்றார். இந்நிகழ்வில், ரோட்டரி கவர்னர் என்.நந்தகுமார், ராஜன் கண் மருத்துவமனை செயல் இயக்குநர் சுஜாதா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நெசவாளர் கண்ணொளி திட்டத்தின்படி 10,000 நெசவாளர்களுக்கு கண்பரிசோதனை, கண் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான நேற்று 300 பேருக்கு முன்னுரிமை அட்டை வழங்கப்பட்டது.