சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று சந்தித்துப் பேசினார். 
தமிழகம்

தமிழகத்தில் நடப்பாண்டில் 28 லட்சம் குடிநீர் குழாய் இணைப்பு: காலக்கெடுவுக்குள் இலக்கை முடிக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 28 லட்சத்து 48 ஆயிரம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை முடிக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிர்நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை எம்ஆர்சி நகரில் நேற்றுநடைபெற்றது. மத்திய நீர்வளத் துறை (Jal Sakthi) அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 125 லட்சம் வீடுகளில், 69 லட்சத்து 50 ஆயிரம் (55.63 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 53.96 சதவீதத்தை விட அதிகம். இந்த ஆண்டின் முதல் மற்றும் 2-வது காலாண்டுக்கான இலக்கு 12 லட்சத்து10 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதாகும். இலக்கைவிட அதிகமாக 16 லட்சத்து 25 ஆயிரம் (134 சதவீதம்)குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுஉள்ளது. 2022-23-ம் ஆண்டில் 28 லட்சத்து 48 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 லட்சத்து 51 ஆயிரம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குழாய் இணைப்புகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், "தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிர்நீர் குழாய் இணைப்பு வழங்கும் இலக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் தூய்மை திட்டத் துறை செயலர் வினி மஹாஜன், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா,ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பி.அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல்வருடன் சந்திப்பு: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல்ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்து, மத்தியநீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, அவர் நேற்று காலை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு அளிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர்.

SCROLL FOR NEXT